top of page
Meenakshi Amman Temple

Abirami Andhathi (26 to 30)

26.ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.

தமிழ்ப்பொருளுரை

பதினான்கு உலகினையும்  படைத்தும், காத்தும், அழித்தும் முத்தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளால் போற்றி வணங்கப்படும் அபிராமிஅன்னையே! இத்தகைய பெருமையும், நறுமணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! எளியவனாகிய என்னுடைய நாவில் தோன்றிய சொற்களை மணம் வீசுகின்ற உன் திருவடிகளில் சாத்துகின்றேன். அத்தகைய சொற்கள் உன் திருவடியில்  ஏற்றம் பெற்றிருப்பது எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.

Tamil Meaning Rajathi. G

English Meaning

Mother! Your devotees, Brahma, Vishnu, and Shiva, are responsible for the creation, preservation, and destruction of these fourteen worlds. Oh Mother, with kadamba flowers adorning your hair, it is due to your divine benevolence that you accept my humble words, which express reverence for your holy feet and fill my heart with ecstatic delight.

27.உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! என் முன் வினைப்பயனால் ஏற்பட்ட வஞ்சப்பிறவியை உடைத்தெறிந்தாய். உன்னையே எண்ணி எண்ணி உருகும் அன்பை உள்ளத்தில் உருவாக்கினாய். உன் தாமரை போன்ற திருவடிகளைத் தொழும் பணியைச் செய்ய எனக்கு அருள் புரிந்தாய்.என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தழித்தாய். இத்தகைய உன் திருவருள் சிறப்பை என்னவென்று உரைப்பேன்!

Tamil Meaning Rajathi. G

English Meaning

Mother! You made this sinner holy, ignited compassion within me, and graced me with the sight of your heavenly feet. With the river of your grace, you washed away the filth from my soul.
Which aspect of your magnificence shall I praise?

28.சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

தமிழ்ப்பொருளுரை

சொல்லோடு இணைந்த பொருள் போல், அழகு நடம் புரியும் ஈசனுடன் இணைந்து ஓருடலாக நிற்கும் நறுமணம் கமழும் பூங்கொடி போன்ற அபிராமி அன்னையே! அன்றே மலர்ந்த புத்தம் புது மலர் போல் உள்ள உன் திருவடி மலர்களை அல்லும், பகலும்  தொழும் அடியவர்க்கு அழியாத அரச போகமும், முக்தி நிலைக்கு செல்கின்ற தவநெறியும், தவத்தின் பயனான சிவலோகபதவியும் கிட்டும்.

Tamil Meaning Rajathi. G

English Meaning

Mother! As the words and their meaning merged, you were united with Lord Shiva. You emanate the smell of blessings around you like a fragrant creeper. You merge within the hearts of devoted worshipers and give a great life while living and mukthi after life to those who offer unwavering reverence without a break.

29. சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமித் தேவியே அஷ்டமாசித்தியாவாள். அச்சித்திகளை வழங்கும் தெய்வமான பரா சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ தழைத்தோங்கக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்பவர் பெறும் முக்தியும், அம் முக்தியால் வித்திடப்படும் ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய அபிராமி அன்னையேயாவாள்!

Tamil Meaning Rajathi. G

English Meaning

Abirami, the divine embodiment of boundless energy, while Parashakthi, the ultimate cosmic force, bestowed upon with these immense powers. The divine presence of Lord Shiva magnifies and elevates the sacred manifestation of Parashakthi. The sacred illumination is attained by devout sages who engage in profound acts of penance for Lord Shiva. You embody the essence of all these aspects, a divine goddess residing within the depths of my inner wisdom and transcending all boundaries. You are the sacred seed of salvation, from which sprouts the profound wisdom that nourishes my soul.

30. அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே,
ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே.

தமிழ்ப்பொருளுரை

 அபிராமி அன்னையே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அத்தகைய துன்பத்திலிருந்து காப்பது உன் கடமையாகும். உன் திருவுளம்தான் என்னை இந்த உலக வாழ்க்கையிலிருந்து கரை ஏற்ற வேண்டும் .ஒன்றாகவும், பலவாகவும்,உருவமற்றவளாகவும் விளங்குகின்ற என் உமையவளே!

English Meaning

Mother! You showed mercy and claimed me as your own. No matter what I do from this point forward, even if I were to dive into the depths of the ocean, my mother! Your decision to save me reveals your kindness. Oh! Goddess Uma! You are both one and many and also invisible at the same time.

bottom of page