top of page

61. நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமித்தாயே! மலைமகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயேனாகிய என்னையும் ஒரு பொருளாகக் கருதி, நீயே வந்து என்னை  ஆட்கொண்டு விட்டாய்! என் நினைவிற்குத் தெரியாமல் நீ எனக்கு அருள் செய்திருக்கிறாய்.  உன்னை அறிந்து கொள்ளும்படியான அறிவையும்,ஞானத்தையும்  எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறு பெற்றேன் அன்னையே!

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Mother! When you cast your divine gaze upon me and graciously chose to rule my mind, enlightening me with your divine grace, I was as unworthy and insignificant as a dog. How privileged I am to be blessed by you, daughter of King Malaiarasan and sister of Lord Vishnu.

62. தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! சிவபெருமான் மேருமலையை பொன் வில்லாகக் கொண்டு, அசுரர்களின் முப்புரத்தை அழித்து, செந்நிறக்கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவார். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பு போன்ற நகிழ்களால் சிவபெருமானை சோர்வடையச் செய்தவள்!  சிவந்த கைகளில் கரும்பு வில்லும், மலர்க்கணைகளோடும் என் சிந்தையில் எப்போதும் நிறைந்திருப்பாய்.

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Indeed, he adorned an elephant's skin as his robe and wielded a golden arrow crafted from the mountain Meru to bring down three formidable cities. Mother, your tight embrace left indelible scars on his mighty frame; the memory of your cane bow and flower arrows remains etched in my heart forever.

63. தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

தமிழ்ப்பொருளுரை

ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடிய அபிராமி அன்னையே யென்று அறிந்திருந்தும் இவளையன்றி வேறு தெய்வத்தைக்கூறும் சமயமும் உண்டு என்று கூறும் வீணர்களுக்கு அவர்கள் நற்கதி அடையும் பொருட்டு அறிவுறுத்தப்படும் நல்வழியானது மிகப் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்க்கும் வீணான செயலாகும்.

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Although Abhirami is worshipped as the supreme Goddess in all six faiths, some people continue to advocate for and praise other belief systems. Attempting to educate such vainglorious folks about Abhirami's grandeur may be as fruitless as attempting to break a hill with a simple stick.

64.வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும் திரு மேனி ப்ர காசமின்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! பல உயிர்களை பலியாக ஏற்றுக்கொள்ளும் பிற தெய்வங்களின் பின் செல்ல மாட்டேன். உன்னையே தெய்வமாக ஏற்று வழிபடுவேன்.  உன்னை புகழ்வதைத் தவிர வேறொன்றே பேசமாட்டேன் பரந்த நிலவுலகிலும், நான்கு திசைகளிலும், எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர வேறொன்றும் காண மாட்டேன்.

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Mother! I fervently seek and adore no other deities that require the sacrifice of living beings. My love and devotion are solely directed towards you. I solemnly pledge to speak only words that praise your divine virtues and refrain from uttering any other words. Your celestial radiance illuminates my vision, and I find no significance in anything else within the skies, earth, and four directions, for you are my ultimate focus and source of inspiration.

65.ககனமும் வானமும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி, நீ செய்த வல்லபமே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே ! உனது இறைவனார்  முன்பொரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்பெருமானுக்கு நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். என்னே உன் திருவருள்!

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Divine Mother Abhirami, it is said that your profound love for Lord Shiva resulted in the birth of Lord Subrahmanya, who possesses six radiant red faces and twelve hands. Lord Shiva, known as the great slayer of Manmatha , became the father of this auspicious deity through your divine affection and connection with him.

bottom of page