top of page

66. வல்லபம் ஒன்றறியேன் சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே

தமிழ்ப்பொருளுரை

பொன்மலையாம் மேருமலையை வில்லாக உடைய சிவபெருமானுடன் இடப்பாகத்தில் அமர்ந்த அபிராமி அன்னையே! நான் வல்லபம் இன்னதென்று அறியாதவன். மிகவும் சிற்றறிவுடையவன். நின் மலர்த்திருவடித் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால்  நான் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும் அதை ஒதுக்குதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Although I am weak in terms of strength, I have nothing besides my devotion to your lotus-like feet.

You reside alongside the Lord Siva, the one who carries the golden bow. These humble verses, though poorly composed, As they bear your sacred name, transform into a divine chant, Endowed with your grace, they find purpose and meaning.

67. தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.

தமிழ்ப்பொருளுரை

 அபிராமி அன்னையே! உனக்கு துதிபாடி வணங்காமலும் மின்னல் போன்ற ஒளியுடைய உன் தோற்றத்தை ஒரு மாத்திரை பொழுதும் மனதில் நினையாதவர்களுக்கு  வள்ளல்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! Those who do not chant your sacred names and fail to contemplate even for a moment on your radiant and benevolent presence shall bear the consequences. They will lose the benefits of charity, family honour, ancestral lineage, merits of knowledge, virtues, and all that they possess. Such wicked individuals will find themselves begging for food from door to door, facing the consequences of their actions.

68. பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவமுடையார் படை யாத தனம் இல்லையே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையானவள்  ஆகாயம், நீர், நிலம்,நெருப்பு, காற்று, என்ற ஐம்பெரும் பூதங்களாகவும், சுவை, மணம்,ஒளி, ஒலி,உணர்வு என்ற அவைகளின் தன்மையாகவும் உள்ள சுந்தரி. அத்தகைய எங்கள் தலைவி சிவகாமசுந்தரியின் திருவடிகளையே சார்ந்து நிற்போர் சிறந்த தவத்தையும் எல்லா செல்வத்தையும் அடைவர். 

Tamil Meaning: Rajathi. G

English Meaning

For those devotees who have taken refuge at the Lotus Feet of Mother Shiva Kama Sundari, who embodies Taste, Light, Sound, Smell, and the five elements - Earth, Water, Fire, Air, and Ether, there will be no wealth that remains unattainable. Through their noble austerities and devotion, they shall be blessed with abundance and prosperity, receiving all that they seek in life.

69. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையானவள் கருமேகத்தைப் போன்ற அடர்ந்த கூந்தலையுடையவள். அவளடைய அருள் பொங்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தையும், நல்ல கல்வியையும், சோர்வடையாத மனத்தையும், தெய்வீக அழகையும், மனதில் வஞ்சம் இல்லாத உறவினர்களையும,  நல்லன எல்லாம் தரும்!

Tamil Meaning: Rajathi. G

English Meaning

 Mother! With your dark and lustrous tresses flowing like clouds, Your benevolent gaze bestows upon devotees abundant wealth, wisdom, and knowledge, An unwavering mind, free from weakness, and a divine radiance of comeliness. Through your divine eyes, devotees receive the boon of virtuous and trustworthy relatives and friends, And from your compassionate gaze, all goodness and blessings are showered upon them.

70. கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும்குரல் வீணையும், கையும் பயோதரமும்
மண்களிக்கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

தமிழ்ப்பொருளுரை

மதங்கர் குலத்தில் தோன்றிய அவள் பேரழகான அபிராமி அன்னையே! என் இரு கண்களும் களிக்கும் விதத்தில் கடம்ப வனம் என்னும் இடத்தில் உறைந்தருக்கும் உன் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரலும், வீணையை தாங்கியிருக்கும் அழகிய கைகளும், அழகிய நகிழ்களைக் கொண்ட  திருமார்பும், மண்ணும் விரும்பும்  பச்சை நிறமும் கொண்டவள் என் அன்னை!

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! You are the epitome of beauty, belonging to the Mathangar clan, adorned with a captivating green complexion that is cherished by the earth. I feel fortunate to have witnessed your extraordinary beauty at Kadambavanam, a sight that filled my heart with joy and wonder. Your exquisite form is graced by the presence of a Veena, held with divine elegance in your hands. Your divine bosom adds to your heavenly splendour, radiating grace and charm to all who behold you. You are the embodiment of divine beauty, and in your presence, one finds solace and awe-inspiring admiration.

bottom of page